யாழில் கனேடிய தம்பதி செய்த மோசமான செயற்பாடு அம்பலம்!

Report
95Shares

கனடாவில் காப்புறுதி பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நகைகள் திருட்டு போனதாக பொய்யான முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் களவு போனதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு செய்த கனேடிய தம்பதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

கனேடிய தம்பதியின் மோசடி தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு மாவட்ட நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் முன்னிலையில் நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

நகை களவு போனதாக பொய் முறைப்பாடு செய்த தம்பதியும் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.

இதன்போதே நகைகள் களவு போனதாக பொய் முறைப்பாட்டினை மேற்கொண்ட குற்றத்தை நீதிமன்றில் கனேடிய தம்பதிகள் ஏற்றுக்கொண்டனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்டவர்களை பிணையில் செல்ல அனுமதித்த நீதிவான், அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை எதிர்வரும் 23 ம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏழாம் திகதி வரணியில் உள்ள வீட்டில் வைத்து சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டதாக கொடிகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நீதிமன்ற விசாரணையின் போது காப்புறுதிப் பணத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு பொய் முறைப்பாடு பதிவு செய்ததாக கனேடிய தம்பதிகள் நீதிமன்றில் ஏற்றுக் கொண்டனர்.

3919 total views