ரஷ்யப் பிச்சைக்காரனும்! சுஷ்மாவின் கரிசனையும்!!

Report
65Shares

தமிழக ஆலயத்தில் பிச்சை எடுத்த 24 வயதுடைய ரஷ்ய சுற்றுலாப் பயணியான பெர்ன் கோவ் என்பவருக்கான அனைத்து உதவிகளையும் தருவதற்குத் தாம் தயார் என வெளியுறவு அமைச்சர் சுஷ்மா இன்று தெரிவித்துள்ளார்.

தமிழக ஆலயங்களை பார்க்க கடந்த மாதம் 24 ஆம் திகதி இந்தியா வந்த பெர்ன் கோவ், கடந்த திங்களன்று காஞ்சிபுரம் வந்துள்ளார். கையில் இருந்த காசு முழுவதும் முடிந்த நிலையில், ஏடிஎம் மூலம் பணம் பெற அவர் முயற்சித்துள்ளார். தனது வங்கி அட்டையின் இரகசிய இலக்கத்தை மறந்த நிலையில், அவரின் தவறான பதிவுகளால் அவரது வங்கி அட்டையை, ஏடிஎம் இயந்திரம் முழுங்கியிருக்கிறது.

வேறு வழியின்றி பக்கத்தில் இருந்த காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயிலில் உறங்கியுள்ளார். மறு நாள் காலை கோயில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்களைப் பார்த்ததும், அதே பாணியில் பிச்சை எடுக்க அவர் முடிவு செய்திருக்கிறார். தனது தொப்பியை கையில் ஏந்தி பிச்சை எடுத்த இவரை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். சிலர் இதனை காவல் துறைக்கு அறிவித்துள்ளனர்.

செய்தி அறிந்த சிவகாஞ்சி காவல் தூறை தமது காவல் நிலையத்திற்கு இவரை அழைத்துச் சென்றுள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த இவரிடம் அனைத்து பயண ஆவணங்களும் முறையே இருந்துள்ளன. இவரின் நிலையைப் புரிந்த குறித்த காவல் துறை இவருக்கு இந்திய ரூபாய் 500 ஐ கொடுத்து, சென்னைக்கு அனுப்பி உள்ளது.

இந்த விவகாரம் ஊடகங்கள் மூலம் பரவி வெளியுறவு அமைச்சு வரை சென்றுள்ளது. இதை அறிந்த வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், `ரஷ்யா எங்கள் பால்ய நண்பன், எமது சென்னை அலுவலகம் உங்களுக்கான அனைது உதவிகளையும் செய்யும்` என தனது ட்வீட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

சுஷ்மா சுவராஜின் இந்தச் செய்தி தமிழக ஆலயங்களில் பிச்சை எடுக்கும் யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை என்பது வேறு கதை.

2975 total views