பறந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் நடந்த விபரீதம்

Report
357Shares

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, தகராறில் ஈடுபட்ட இரு விமானிகளை, ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம், 'சஸ்பெண்ட்' செய்துள்ளது.

சமீபத்தில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்து, மும்பை நோக்கி, 324 பயணியருடன், ஜெட் ஏர்வேஸ் தனியார் விமான நிறுவனத்தின் விமானம் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அதில் இருந்த விமானிக்கும், பெண் துணை விமானிக்கும் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து, துணை விமானியின் கன்னத்தில், விமானி அறைந்தார்.

இதனால், விமானத்தை இயக்கும், 'காக்பிட்' பகுதியில் இருந்து, அழுதபடி, துணை விமானி வெளியேறினார். அவரை மீண்டும் காக்பிட் பகுதிக்கு அனுப்பும்படி, விமான ஊழியர்களுக்கு, விமானி உத்தரவிட்டார்.

அவர் வராததால், விமானத்தை, தானே இயங்கும் வகையில் விட்டு விட்டு, விமானியும், காக்பிட்டை விட்டு வெளியே வந்தார். இதனால், பயணியர் பீதியுடன் பயணிக்க நேர்ந்தது.

அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக, லோக்சபாவில், விமான போக்குவரத்து துறை அமைச்சர், அசோக் கஜபதி ராஜு தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, துணை விமானியை அறைந்த விமானி, விமானம் ஓட்ட வழங்கப்பட்டிருந்த லைசென்சை, சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த நிலையில், விமானத்தில் தகராறில் ஈடுபட்ட இரு விமானிகளையும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. இந்த இரு விமானிகளும், காதலர்கள் என தகவல்கள் கூறுகின்றன.

11901 total views