இலங்கையில் அதிசொகுசு வாகனம் வைத்திருப்போருக்கு முக்கிய செய்தி

Report
278Shares

இலங்கையில் சொகுசு, அரைசொகுசு மற்றும் இரட்டை அரைசொகுசு வாகனங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய வரி நிலுவையை செலுத்துவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான கயந்த கருணாதிலக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சொகுசு, அரை சொகுசு மற்றும் இரட்டை அரை சொகுசு வாகனங்கள் முதலில் பதிவு செய்த தினத்தில் இருந்து 07 வருடங்கள் வரை தொடர்ந்து வரிப்பணம் செலுத்த வேண்டும்.

அதன் முதலாவது வரிப்பண தவணையினை குறித்த வாகனம் பதிவு செய்யப்படும் போது மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால் அறிவிடப்படும்.

மிகுதி தொகையினை அத்திணைக்களத்திற்கோ அல்லது காப்புறுதி நிறுவனத்திற்கோ செலுத்த முடியும். அவ்வாறு வரிப்பணத்தை செலுத்தாது விடுகின்ற சந்தர்ப்பங்களில் மிகுதி வரிப்பணத்துக்காக 50% தண்டப்பணம் அறிவிடப்படும்.

இதுவரை மொத்த மிகுதி வரிப்பணத் தொகையாக 350 மில்லியன் ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது.

அவ்வாறு வரிப் பணத்தை செலுத்துவதற்கு கால தாமதம் ஏற்படுவதற்கு வாகன உரிமையாளர்களின் நிர்வாகத்துக்கு புறம்பான காரணங்களும் ஏதுவாய் அமைகின்றன.

இதனை கவனத்திற் கொண்டு, சொகுசு, அரைசொகுசு மற்றும் இரட்டை அரை சொகுசு வாகனங்களுக்காக செலுத்தப்பட வேண்டிய மிகுதி வரிப்பணத்தினை செலுத்துவதற்காக 2017.09.01ஆம் திகதி முதல் 2017.11.30ஆம் திகதி வரை 03 மாத கால அவகாசம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சலுகை காலத்தினுள் மிகுதி வரிப்பணத்தை செலுத்துகின்ற வாகன உரிமையாளர்களுக்கு உரிய தண்டப்பணத்தில் 5% மாத்திரம் அறவிடுவதற்கும் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9852 total views