பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்

Report
59Shares

இலங்கை அரசு இழைத்த பாரிய மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அட்டூழியங்கள் விடயத்தில் அதனைப் பொறுப்புக்கூற வைப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் தவறிவிட்டதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இலங்கையுடனான பிரித்தானிய உறவைக் கண்டித்தும் லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் லண்டன் தூதரகத்திலிருந்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சை நோக்கி பேரணியாக செல்லவுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள இலங்கைத்தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர்ந்த தமிழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ கழுத்தை அறுக்கும் சைகையை காண்பித்திருந்தார் .

பிரிகேடியர் பெர்ணான்டோவின் நடவடிக்கையானது, தமிழர்கள், பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,மனிதஉரிமைகள் அமைப்புக்களின் கடும்கண்டனத்திற்கு உள்ளாகியதுடன் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆயுதப்போரின் இறுதிநாட்களில் இழைக்கப்பட்டதாக கூறப்படும், பாரிய அட்டூழியத்தை நினைவுறுத்துவதாக அமைந்துள்ளன எனக்கூறியிருந்தன.

பிரிகேடியர் பிரியங்கரவிற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும் அவரை உடனே நாடுகடத்த வேண்டும் எனக்கோரி இன்றைய தினம் உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட பத்து புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1807 total views