ஃபீல்ட்ஸ் மெடல் வென்ற கணித மேதை மர்யம் மிர்ஸகாணி காலமானார்

Report
20Shares

ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வென்ற முதல் பெண்மணி கணித மேதை மார்யம் மிர்ஸாகாணி சனிக்கிழமை அமெரிக்காவில் காலமானார். அவருக்கு வயது 40.

ஈரானில் பிறந்த கணிதவியலாளர், ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வென்ற முதல் பெண்மணி கணித மேதை மார்யம் மிர்ஸாகாணி, கடந்த நான்கு வருடங்களாக புற்றுநோயுடன் போராடி வந்தார். மிர்ஸகாணியின் மரணத்தைப் பற்றி அவரது நண்பரும் நாசா விஞ்ஞானியுமான ஃபிரவுஸ் நடேரி சனிக்கிழமை இண்ஸ்டாகிராமில் இதை அறிவித்தார்.

மிர்ஸகாணியின் உறவினர்களும் ஈரானிய மிஹ்ர் செய்திநிறுவனத்திடம் இச்செய்தியை உறுதிபடுத்தினார்கள்.

''ஓர் ஒளி இன்று அணைந்துவிட்டது. இது என் இதயத்தை உடைக்கிறது... மிகவும் விரைந்து தொலைவாய் சென்று'' என்று குறிப்பிட்டுள்ளார் நடேரி, நாசாவின் முன்னாள் சூரிய குடும்ப அமைப்புகளின் ஆய்வு இயக்குநர்.

''ஒரு மேதை? ஆமாம், ஆனால் அவர் ஒரு மகள், ஒரு தாய் மற்றும் ஒரு மனைவியும்கூட'' தொடர்ந்து பதிவிட்ட இன்னொரு நிலைத்தகவலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மிர்ஸகாணி, கலிஃபோர்னியா ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். எலும்பு மஜ்ஜைகளில் புற்றுநோய் பரவியதால் நான்கு ஆண்டுக்காலம் அந்நோயோடு போராடி வந்தார் என ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிர்ஸகாணி கணிதத் துறையில் சாதித்தமைக்காக 2014ல் ஃபீல்ட்ஸ் மெடல் விருதை வென்றார். இண்டர்நேஷ்னல் காங்கிரஸ் ஆப் மேத்தமேடிசியன்ஸ் அமைப்பினால் வழங்கப்படும் இவ்விருது நோபல் பரிசுக்கு இணையானதாகக் கருதப்படுகிறது.

வடிவகணிதம் மற்றும் இயக்கவியல் முறைமைகள் துறையில் மிர்ஸகாணி தனிப்பட்ட முறையில் ஆற்றிய அதிநவீன உயர்ந்த பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டது. குறிப்பாக கோள வடிவங்களின் வளைந்த பரப்புகளில் உள்ள சமச்சீர் தன்மையைப் புரிந்துகொள்ளுதலில் இவர் நிகழ்த்திய ஆய்வுக்காக விருது பரிந்துரைக்கப்பட்டது.

திறமைக்கு மரியாதை

மிர்சகாணி ஏற்கெனவே தூய கணிதத்தில் மேம்பட்ட ஆராய்ச்சிக்காக 2009 புளுமெந்தால் விருது மற்றும் 2013ல் அமெரிக்கன் மேத்தமெடிக்கல் சொஸைட்டி வழங்கும் சாட்டர் பிரைஸ் விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.

மிர்ஸகாணி டெஹ்ரானில் பிறந்து வளர்ந்தவர். ஆரம்பத்தில் தான் ஓர் எழுத்தாளராக வேண்டும் என்பதுதான் அவரது கனவாக இருந்துள்ளது. ஆனால் அவர் உயர்நிலைப் பள்ளியில் படிக்கத் தொடங்கியபோது, கணித சிக்கல்களில் தீர்வு காண்பதிலும் அதை தீர்வை நிறுவிட தொடர்ந்து வேலை செய்வதிலும் அவர் காட்டிய ஈடுபாடு அவரது கனவை மாற்றிக்கொள்ளத் தூண்டியது.

''இது வேடிக்கையானது. புதிர்களை விடுவிப்பது போன்றது அல்லது ஒரு துப்பறியும் வழக்கில் வெவ்வேறு புள்ளிகளை இணைப்பது போன்றது. நான் செய்யக்கூடிய ஒன்றாக இது இருந்ததை நான் உணர்ந்தேன். இப்பாதையையும் நான் அடைய விரும்பினேன்'' - ஃபீல்ட்ஸ் மெடல் விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய மிர்ஸகாணியின் வார்த்தைகள் இவை.

1496 total views