சட்டவிரோத அகதிகளை வெளியேற்றக்கோரி போராட்டம் ; 1,000 பேர் கைது
தென் ஆப்பிரிக்காவில் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் எந்தவித ஆவணமும் இன்றி சட்டவிரோதமாக வாழ்ந்து வருகின்றனர்.
ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அகதிகள் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வருகின்றனர்.

1000 பேர் கைது
அதேவேளை, தென் ஆப்பிரிக்காவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை சூழ்நிலை சட்டவிரோத அகதிகளால் அதிகரித்து வருவதாக உள்ளூர் மக்கள் கருதுகின்றனர்.
இதனால், தென் ஆப்பிரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள அகதிகளை கண்டறிந்து அவர்களின் சொந்த நாடுகளுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளன. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் இப்போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தின் முடிவில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், சட்டவிரோத அகதிகளை நாட்டை விட்டு வெளியேற்றக்கோரி நேற்று நடந்த போராட்டத்தில் நாடு முழுவதும் 1000 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அதேவேளை, போராட்டத்தின் போது கடைகள் சூறையாடப்பட்டு அங்குள்ள பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
மேலும், போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று போராட்டக்குழுவினர் அறிவித்துள்ளதால் தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.