ஒட்டாவாவின் ஓவர்புரூக் பகுதியில் துப்பாக்கிச் சூடு: ஆண் ஒருவர் பலி
ஒட்டாவாவின் ஓவர்புரூக் குடியிருப்புப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெர்னார்ட் வீதியின் 700-ஆவது தொகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் சம்பவம் இடம்பெறுவதாக இரவு 7:00 மணிக்குச் சற்று முன்னதாக ஒட்டாவா காவல்துறையினருக்கு அழைப்பு கிடைத்துள்ளது.
இதனையடுத்துச் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தினர்.

படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட நபருக்கு முதலுதவி அளித்த மருத்துவப் பணியாளர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகக் காவல்துறையினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், எதிர்வரும் நாட்களில் மேலதிக தகவல்கள் வெளியிடப்படும் எனக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்தவர்கள் ஒட்டாவா காவல்துறையின் கொலைக் குற்றப் புலனாய்வுப் பிரிவை 613-236-1222 (நீட்டிப்பு 5493) என்ற இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டில் ஒட்டாவாவில் பதிவான 12-ஆவது கொலைச் சம்பவம் இதுவாகும். அத்துடன், கடந்த நான்கு நாட்களில் இடம்பெற்ற இரண்டாவது கொலையாகவும் இது பதிவாகியுள்ளது.