ஐரோப்பிய நாடொன்றில் உக்ரைனுக்கு ஆதரவாக குவிந்த 1 லட்சம் மக்கள்
உக்ரைனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள போரை எதிர்த்து ஜேர்மன் தலைநகரான பெர்லினில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 1,00,000 மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ரஷ்யா உக்ரைனில் தனது போரை தொடர்ந்து நடத்தி வருவதால், ரஷ்யா மீது ஜேர்மன் அமெரிக்கா பிரித்தானியா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகள் மற்றும் பயணத்தடைகளை விதித்து வருகிறது.
இந்நிலையில் இந்த போரை எதிர்த்து ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் பொதுமக்கள் கூடி பெரும் போராட்டத்தை நேற்று நடத்தியுள்ளனர்.
முன்னரே அறிவிக்கப்பட்டு இருந்த இந்த போராட்டத்தில் சுமார் 20,000 நபர்களே பங்கேற்பார்கள் என அங்குள்ள பொலிசார் கணித்த நிலையில், இந்த போராட்டத்தில் கிட்டத்தட்ட 1,00,000 மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் "போரை நிறுத்துங்கள்" "மூன்றாம் உலக போர் வேண்டாம்" மற்றும் "நாங்கள் உக்ரைனுடன் நிற்கிறோம்" போன்ற பதாகைகளுடன், உக்ரைன் தேசிய கொடியுடனும், ஐரோப்பிய நாடுகளின் கொடியுடனும் ரஷ்ய தூதரகத்திற்கு அருகில் இருந்த பெர்லினின் பிராண்டன்பேர்க் கேட் நோக்கிச் சென்றுள்ளனர்.
இதன்படி ஐக்கிய நாடுகள் சபை இந்த போரால் அகதிகள் அதிகரிக்கும் அச்சம் இருப்பதாக தெரிவித்து இருந்த நிலையில், இந்த போராட்டத்தின் போது "உக்ரைனியர்களே இங்கே வாருங்கள், நாங்கள் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்" என ஒருவர் சத்தமிடவே, அங்குள்ள பெரும் கூட்டம் அதை ஆரவாரத்துடன் வரவேற்று ஆதரவு அளித்தனர்.
மேலும் இந்த போராட்டத்தால் பெர்லினில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் சுரங்கபாதை சேவைகளில் தடை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.