மிசிசாகாவின் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் ஒருவர் பலி
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகா நகரின் குக்ஸ்வில் (Cooksville) பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஏற்பட்ட குடியிருப்பு தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் நால்வர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேர்த் சேர்விஸ் வீதி மற்றும் அஸ்டா டிரைவ் அருகிலுள்ள கட்டிடத்தில் தீ பரவியதாக பீல் போலீஸ் தெரிவித்துள்ளது.
கட்டிடத்தின் முதல் தளத்தில் கடும் புகையும் தீயும் பரவியிருந்தது எனவும் எங்கள் குழுவினர் விரைவாக தீயை கட்டுப்படுத்தினர் எனவும் மிசிசாகா தீயணைப்பு மற்றும் அவசர சேவை (MFES) பிரிவின் பிளாட்டூன் தலைவர் ரயன் பேயார்ட் கூறியுள்ளார்.

ஆனால், அந்த வீட்டில் இருந்த ஒருவரை சலனமற்ற நிலையில் மீட்டதாகவும் பின்னர் அந்த நபர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், நான்கு பேர் புகை மூச்சு விஷத்தன்மை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பீல் அவசர மருத்துவ சேவை தெரிவித்துள்ளது. கட்டிடம் முழுவதும் காலி செய்யப்பட்டுள்ளது.
மேலும் குடியிருப்பாளர்கள் திரும்ப அனுமதிக்கப்படும் முன் காற்றின் தரம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தீ விபத்திற்கான காரணங்கள் பற்றி இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
தற்போது, இது சந்தேகத்திற்குரிய சம்பவம் என்று எந்த அறிகுறியும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மிசிசாகா தீயணைப்பு சேவை விசாரணையை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.