ஸ்கேட்டிங் செய்த 10 வயது சிறுமி விபத்தில் பலி
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள வெல்ஸ்லி டவுன்ஷிப்பில் ரோலர்பிளேடிங் எனப்படும் சக்கர காலணிகளுடன் ஸ்கேட்டிங் செய்து கொண்டிருந்த 10 வயது சிறுமி, வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
ஏமென்ட் லைன் பகுதியில் ரோடு 116 அருகில் சிறுமி ஒருவர் வேன் மோதி விபத்தில் சிக்கியதாக அவசரக்கால மீட்புக் குழுவினருக்குத் தகவல் கிடைத்தது.
விபத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் இருந்த சிறுமி, உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டதாக வாட்டர்லூ பிராந்திய காவல் துறை அறிவித்தது.
விபத்தை ஏற்படுத்திய வேனை ஓட்டி வந்த 71 வயதான ஹூரான் கவுண்டியைச் சேர்ந்த நபருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து வாட்டர்லூ பிராந்திய காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.