உயிருடன் காற்சட்டைக்குள் வைத்துக் கடத்த முயன்ற 100க்கும் அதிகமான பாம்புகள்!
சீன நாட்டில் 100-க்கும் அதிகமான பாம்புகளை உயிருடன் காற்சட்டைக்குள் மறைத்து வைத்துக் கடத்த முயன்ற நபர் ஒருவர் சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹாங்காங்கில் இருந்து எல்லை நகரமான ஷென்சென் பகுதிக்கு செல்ல முயன்ற போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டவரின் பைகளைத் திறந்து சோதனை செய்தபோது, ஒவ்வொரு பைக்குள்ளும் வெவ்வேறு அளவில், பல வகையான நிறங்களைக் கொண்ட பாம்புகள் உயிருடன் இருந்துள்ளன.
மொத்தம் 104 பாம்புகளை அவர் மறைத்து வைத்துக் கடத்தியதாக சோதனையில் ஈடுபட்ட சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதில், பல பாம்புகள் சீன நாட்டிலுள்ள இனத்தைச் சேராதவை என்று கூறிய அதிகாரிகள் அதனைக் கடத்தி வந்த நபரைக் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டக் காணொளியில் கடத்தி வரப்பட்ட வெவ்வேறு வகைப் பாம்புகள் அதிகாரிகள் முன்னிலையில் வைக்கப்பட்டுள்ளன.