அமெரிக்க இராணுவ ஏவுகணைத் தாக்குதல்களில் 11 பேர் உயிரிழப்பு
அமெரிக்க இராணுவம் கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் பகுதிகளில் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவங்கள் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகக் சந்தேகிக்கப்படும் மூன்று படகுகளே தாக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

40-க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள்
கிழக்கு பசிபிக் பகுதியில் தாக்கப்பட்ட முதல் படகில் 4 பேரும், அதே பகுதியில் தாக்கப்பட்ட இரண்டாவது படகில் 4 பேரும், கரீபியன் கடலில் தாக்கப்பட்ட மூன்றாவது படகில் 3 பேரும் கொல்லப்பட்டதாக அமெரிக்க கூறுகிறது.
அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதைத் தடுக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் ''Operation Southern Spear'' என்ற பெயரில் இந்த இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறது.
இதன்படி, 2025 செப்டம்பர் மாதம் முதல் இதுவரை 40-க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதில் இதுவரை சுமார் 145 முதல் 150 பேர் உயிரிழந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.