ஒரே நாளில் 12 பேர் கொடூர கொலை... அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவங்கள்!
மெக்சிகோ - குரேரோ மாகாணத்தில் உள்ள அகாபுல்கோ நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 12 பேர் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியுள்ளது.
இச்சம்பவம் கடந்த 20-05-2024 ம் திகதி இடம்பெற்றுள்ளது.
அகாபுல்கோ நகராட்சிக்கு உட்பட்ட ரிசார்ட்டின் அகுவாஸ் பிளான்காஸ் ரவுண்டானாவுக்கு அருகே 4 ஆண்கள் மற்றும் 2 பெண்களின் உடல்கள் பல துப்பாக்கிச்சூடு காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டன.
இவர்களில் பலரின் உடல்களில் சித்திரவதை செய்த அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, அகாபுல்கோவின் புறநகர் பகுதியில் உள்ள ரிக்கார்டோ புளோரஸ் மாகோன் மாவட்டத்தில் ஏறக்குறைய ஒரே நேரத்தில் நிகழ்ந்த 2 ஆயுத தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
இந்த வன்முறை செயல்களுக்கு முன்னதாக, பிரபல ஹோட்டல் கோல்டன் சோனுக்கு அருகிலுள்ள இகாகோஸ் மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இதேபோல அகாபுல்கோ ட்ரடிஷனல் என்ற ஹோட்டலில் பழைய கட்டிடத்தில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இச் சம்பவம் போதைப்பொருள் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலால் நடைபெற்றதா? என்ற கோணத்தில் குரேரோ மாகாண பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.