கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகள் எவை!
கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் வேலைவாய்ப்புகளில் பெரும்பாலானவை செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களைச் சார்ந்தவை என லிங்க்ட்இன் வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
“வேலைவாய்ப்பு பயணத்தின் ஒவ்வொரு கட்டத்தையும் செயற்கை நுணண்றிவு மாற்றி அமைத்து வருகிறது. இந்த மாற்றங்களில் முன்னிலைப் பெற பல பணியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
நிலைமை தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கும் சூழலில், புதிய வாய்ப்புகளை கண்டறிதல் இதற்கு முன் இல்லாத அளவுக்கு முக்கியமானதாகியுள்ளது” என லிங்க்ட்இன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லிங்க்ட்இன் பயனர் தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆண்டுதோறும் வெளியாகும் வேலைவாய்ப்பு அதிகரிப்பு அறிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளில் கனடாவில் மிக வேகமாக வளர்ந்த 15 வேலைவாய்ப்புகளை தரவரிசைப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டின் பட்டியல், செயற்கை நுண்ணறிவு பொறியாளர்கள், செயற்கை நுண்ணறிவு ஆலோசகர்கள் போன்ற தொழில்நுட்ப மற்றும் மூலோபாய செயற்கை நுண்ணறிவு பணிகளில் தொடர்ச்சியான வளர்ச்சியையும், கட்டமைப்பு சார்ந்த மேலாளர்கள் போன்ற பணிகளின் முக்கியத்துவத்தையும் காட்டுகிறது என லிங்க்ட்இன் குறிப்பிட்டுள்ளது.
இதில் சுகாதாரம், கட்டுமானம் மற்றும் விற்பனை துறைகளும் முன்னணி வேலைவாய்ப்புகளாக உள்ளன.
லிங்க்ட்இன் அறிக்கையின்படி, கனடாவில் வேகமாக வளர்ந்து வரும் 15 வேலைவாய்ப்புகள் பின்வருமாறு:
1. ஏ.ஐ. பொறியாளர்கள் – செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை உருவாக்கி செயல்படுத்துவோர்.
2. ஏ.ஐ. ஆலோசகர்கள் மற்றும் மூலோபாய வல்லுநர்கள் – நிறுவனங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த உதவுவோர்.
3. மின்சார அமைப்பு பொறியாளர்கள் (Power Systems Engineers) – மின்சார அமைப்புகளை வடிவமைத்து மதிப்பீடு செய்வோர்.
4. ஏ.ஐ./மெஷின் லேர்னிங் ஆராய்ச்சியாளர்கள் – ஏ.ஐ. அமைப்புகளை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர். 5. மேலாளர்கள் – கட்டுமானம் மற்றும் பொறியியல் திட்டங்களை சோதித்து உறுதிப்படுத்துவோர்.
6. முதன்மை தயாரிப்பு அதிகாரிகள் (Chief Product Officers) – நிறுவனங்களின் தயாரிப்பு மேம்பாடு மற்றும் மூலோபாயத்தை வழிநடத்துவோர்.
7. கிளினிக்கல் சேவைகள் மேலாளர்கள் – சுகாதார நிலையங்களின் செயல்பாடுகளை மேற்பார்வையிடுவோர்.
8. மோசடி விசாரணை அதிகாரிகள் – நிறுவனங்களில் மோசடியை கண்டறிந்து தடுப்போர்.
9. கட்டுமான மேலாளர்கள் – கட்டுமான திட்டங்களை கண்காணித்து நிர்வகிப்போர்.
10. நிறுவனர் (Founders) – புதிய வணிக யோசனைகளை தொழில்களாக மாற்றுவோர்.
11. கார் விற்பனை மேலாளர்கள் – கார் விற்பனை நிலையங்களின் தினசரி நடவடிக்கைகளை நடத்துவோர்.
12. இதய நோய் நிபுணர்கள் (Cardiologists) – இதய நோய்களை கண்டறிந்து சிகிச்சையளிப்போர்.
13. தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் – தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை பராமரிப்போர்.
14. உளவியல் ஆலோசகர்கள் (Psychotherapists) – மனநல ஆலோசனை மற்றும் சிகிச்சை வழங்குவோர்.
15. தரவுத்தள பகுப்பாய்வாளர்கள் (Database Analysts) – நிறுவனங்களில் தரவை நிர்வகித்து பகுப்பாய்வு செய்வோர்.
இந்த அறிக்கை, கனடாவில் எதிர்கால வேலைவாய்ப்புகள் பெரும்பாலும் தொழில்நுட்பம், குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்ததாக இருக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது.