IRGC நிதி ஆதாரங்களை முடக்குவோருக்கு 15 மில்லியன் டொலர் பரிசு ; அமெரிக்காவின் அறிவிப்பு
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரக் காவல் படையின் (IRGC) நிதி ஆதாரங்களை முடக்குவதற்குத் தேவையான தகவல்களை வழங்குபவர்களுக்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர் வெகுமதி அளிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறையின் பேச்சாளர் டொமி பிகோட் தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசாங்கத்திற்கு எதிரான பொருளாதார அழுத்தங்களை அமெரிக்கா தொடர்ந்து தீவிரப்படுத்தி வரும் நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா, இதற்கு முன்னரும் ஈரான் தொடர்பான தகவல்களுக்குப் பல மில்லியன் டொலர் வெகுமதிகளை அறிவித்திருந்ததுடன், கடந்த ஆகஸ்ட் மாதத்திலும் IRGC இன் ஐந்து சிரேஷ்ட தளபதிகளை அடையாளம் காண உதவும் தகவல்களுக்கு 10 மில்லியன் டொலர் வழங்குவதாகக் கூறியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ஈரானுக்கு ஆயுதங்கள் மற்றும் ஆயுத உதிரிப்பாகங்களைக் கொள்வன செய்து விநியோகிப்பதில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ், புதிதாக 8 நிறுவனங்கள் மற்றும் 5 தனிநபர்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் டொமி பிகோட் தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஆயுதப் பரவல் வலைப்பின்னல்களை முடக்குவதற்கும், இவ்வாறான நடவடிக்கைகளுக்குப் பயன்படும் பொருட்கள், தொழில்நுட்பம், நிதி மற்றும் சேவைகள் ஈரானிய ஆட்சிக்குக் கிடைப்பதைத் தடுப்பதற்கும் பங்காளிகளுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.