17 டிடிபி பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; பாகிஸ்தான் பாதுகாப்புப் படை நடவடிக்கை
பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையின்போது தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் (டிடிபி) அமைப்பைச் சோ்ந்த 17 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றதாக காவல் துறை தெரிவித்தது.
இதுதொடா்பாக கரக் மாவட்ட காவல் துறை அதிகாரி ஷாபஸ் எலாகி கூறியதாவது,
டிடிபி, முல்லா நசீா் குழுவுடன் தொடா்புடைய பயங்கரவாதிகள் கரக் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, எல்லைப் படை மற்றும் காவல் துறையினா் இணைந்து அப்பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, பாதுகாப்புப் படையினா் தங்களை நெருங்குவதைப் பாா்த்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா்.
இதற்குப் பாதுகாப்புப் படையினா் தரப்பில் உரிய பதிலடி தரப்பட்டது. இதில், 17 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.
இந்தச் சண்டையின்போது பாதுகாப்புப் படையினா் 3 போ் காயமடைந்தனா் என்றாா் அவா்.