பிரான்ஸில் 17 வயது சிறுவன் சுட்டுக்கொலை: பொலிஸாருக்கு எதிராக போராடிய150 பேர் கைது!
பிரான்ஸில் 17 வயது சிறுவன் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் நீல் (வயது 17) என்ற சிறுவன் மீது பொலிஸார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இச் சம்பவத்தில் அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார். கீழ்படியவில்லை என்பதற்காக பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர் என கூறப்படுகிறது.
இந்த சம்பவம் பற்றி தெரிந்ததும், மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பாரிஸின் எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் 24 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர். 40 கார்கள் தீக்கிரையாகி உள்ளன. இதனால், வன்முறை தொடர்ந்து பரவி விடாமல் தடுப்பதற்காக 2 ஆயிரம் கூடுதல் பொலிஸ் அதிகாரிகள் நேற்று குவிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், மந்திரிகள் மட்டத்திலான நெருக்கடி பிரிவினர் கலந்து கொண்ட கூட்டத்தில் தலைமையேற்று இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன.