ஒரே நாளில் 2,000 நிலநடுக்கங்கள்: கனேடிய தீவொன்றில் நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வு
கனேடிய தீவொன்றில், இந்த மாத துவக்கத்தில், ஒரே நாளில் 2,000 முறைக்கும் அதிகமாக நிலநடுக்கங்கள் உருவானதாக செய்தி ஒன்று வெளியாகியுள்ள நிலையில், அது பயத்தை ஏற்படுத்தும் செய்தி அல்ல என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கனடாவின் வான்கூவர் தீவுகளில், இம்மாத துவக்கத்தில் ஒரே நாளில் 2,000க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
ஆனால், அது அச்சுறுத்தும் செய்தி அல்ல, அது ஒரு இயற்கை நிகழ்வு என்கிறார்கள் அறிவியலாளர்கள். அந்த நிலநடுக்கங்கள் அனைத்துமே ரிக்டர் அளவில், 1க்கும் குறைவான அளவிலேயே பதிவானவையாகும்.
கடலுக்குக் கீழே உள்ள நிலப்பரப்பில், அதாவது கடல்படுகையில், இரண்டு புவித் தட்டுகள் மெதுவாக விலகும்போது, இரண்டு தட்டுகளுக்கும் இடையில் சுமார் 1 மீற்றர் நீளமான இடைவெளி உருவாகும். அந்த இடைவெளியை நிரப்புவதற்காக, பூமியின் மையப்பகுதியிலிருக்கும் எரிமலைக் குழம்பு மெதுவாக மேலே வந்து, உறைந்து அந்த இடத்தில் பாறையாக மாறி அமர்ந்துவிடுமாம். ஆக, புவித்தட்டுகள் விலகிய இடத்தில், ஒரு புதிய கடல் படுகை உருவாகிறது.
Seafloor spreading என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் காரணமாகவே இந்த சிறு சிறு நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன என்கிறார்கள் அறிவியலாளர்கள்.