அமெரிக்கப் பயணத்தைப் புறக்கணிக்கிறார்களா கனடியர்கள்?
அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான வர்த்தகப் பதற்றங்கள் மற்றும் அரசியல் சூழல் காரணமாக, 2026-ஆம் ஆண்டில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் கனடியர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கிறது.
43 சதவீத கனடியர்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அமெரிக்காவிற்குச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என நேனோஸ் ரிசர்ச் (Nanos Research) நிறுவனம் தெரிவித்துள்ளது.
43% பேர் அமெரிக்கப் பயணத்தைத் தவிர்க்க முடிவெடுத்துள்ளனர், என்பதுடன் 38% கனடியர்கள் பொதுவாகவே அமெரிக்காவிற்கு விடுமுறைக்காகச் செல்வதில்லை எனக் குறிப்பிட்டுள்ளனர்.

வெறும் 4% பேர் மட்டுமே அமெரிக்காவிற்கு அதிக நேரம் செலவிட விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.
2025 டிசம்பர் மாதத்தில் அமெரிக்கா சென்ற கனடியர்களின் எண்ணிக்கை 25% வீழ்ச்சியடைந்துள்ளதாக கனடா புள்ளிவிபரத் திணைக்களம் (Statistics Canada) உறுதிப்படுத்தியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளில் ஏற்பட்டுள்ள விரிசல் மற்றும் அமெரிக்கப் பொருட்களின் மீதான அதிருப்தி ஆகியவற்றை வெளிப்படுத்தவே கனடியர்கள் இந்த 'மென் புறக்கணிப்பை' (Soft Boycott) மேற்கொள்வதாக ஆய்வாளர் நிக் நேனோஸ் தெரிவித்துள்ளார்.
கனடியர்கள் அமெரிக்கப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் புறக்கணிப்பதன் மூலம் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறார்கள். வர்த்தக உறவுகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தங்களின் கவலையை அவர்கள் இதன் மூலம் வெளிப்படுத்துகிறார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்கப் பயணங்களைத் தவிர்க்கும் கனடியர்கள், இந்த ஆண்டு தங்களது சொந்த நாட்டிற்குள்ளேயே (Domestic travel) சுற்றுலா செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.