ஒட்டாவாவில் உணவு வங்கிகளுக்கான தேவை வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு
கனடாவின் தலைநகரான ஒட்டாவாவில் கடந்த ஆண்டு உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்ட குடும்பங்களின் விகிதம் முந்தைய ஆண்டை விடக் குறைந்துள்ள போதிலும், தமது சேவைகளுக்கான தேவை குறையவில்லை என 'ஒட்டாவா உணவு வங்கி' தெரிவித்துள்ளது.
ஒட்டாவா உணவு வங்கியின் அண்மைய 'பசி அறிக்கையின்' படி, 2024 ஆம் ஆண்டில் 25.5 சதவீதமாக இருந்த உணவுப் பாதுகாப்பின்மை விகிதம், கடந்த ஆண்டு 20.7 சதவீதமாகக் குறைந்துள்ளது.
எனினும், ஒட்டாவா உணவு வங்கி வலையமைப்பிற்கு வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 0.5 சதவீதம் அதிகரித்து, 591,686 என்ற வரலாறு காணாத உச்ச அளவிலேயே நீடிக்கிறது. "இந்த விகிதம் குறைந்தது போல் தோன்றினாலும், புள்ளிவிவர ரீதியாக இது பெரிய மாற்றமல்ல.

இது உணவுப் பாதுகாப்பின்மையில் ஏற்பட்ட உண்மையான வீழ்ச்சியை விட, ஆண்டுதோறும் ஏற்படும் சாதாரண மாற்றத்தையே பிரதிபலிக்கிறது," என ஒட்டாவா உணவு வங்கி குறிப்பிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டிலிருந்து பதிவான வருகைகளின் எண்ணிக்கை 102 சதவீதம் அதிகரித்துள்ளதால், உள்ளூர் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. ஐந்து வீடுகளில் ஒரு வீடு உணவுப் பாதுகாப்பின்றி இருப்பது என்பது மிக அதிகமான எண்ணிக்கையாகும் எனவும், உதவி தேவைப்படும் அனைவரும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
விலைவாசி உயர்வு குடும்பங்களின் வரவு செலவுத் திட்டங்களை மட்டுமல்லாது, உணவு வங்கி மற்றும் அதன் கூட்டாளிகளுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பாதுகாப்பின்மை என்பது தனிநபர்களின் தவறான திட்டமிடலால் ஏற்படுவதல்ல; மாறாக, போதிய வருமானமின்மை, கட்டுப்படியாகாத வீட்டு வாடகை மற்றும் பொது நலன்புரித் திட்டங்களில் உள்ள இடைவெளிகளாலேயே ஏற்படுகிறது," என ஒட்டாவா உணவு வங்கி தெரிவித்துள்ளது.
எனவே, மக்கள் தமது பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டு இதற்கான தீர்வுகளை வலியுறுத்த வேண்டும் எனவும் அவ்வமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.