தெற்கு லண்டனில் 25 வயதான பேருந்து ஓட்டுநர் சுட்டுக் கொலை ; நண்பர்கள் உருக்கம்
தெற்கு லண்டனின் கிளாப்ஹாம் (Clapham) பகுதியில் உள்ள பப் ஒன்றுக்கு வெளியே 25 வயதான பேருந்து ஓட்டுநர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் பெருநகரக் காவல் துறையினரால் (Metropolitan Police) ஆகஸ்ட்-மேரி பைல்-அகா அமோவா (Auguste-Marie Bile-aka Amoa) என அடையாளப்படுத்தப்பட்ட அந்த இளைஞர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அவர் மிகவும் அமைதியானவர், கடின உழைப்பாளி
வில்லிங்டன் சாலையில் (Willington Road) உள்ள தி லேண்டர் (The Landor) பப் அருகே திங்கள்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் காவல் துறைக்குத் தகவல் கிடைத்தது.
நான்கு முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாகக் கூறிய அப்பகுதி மக்கள், சாலையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞருக்கு முதலுதவி செய்ய முயன்றனர்.
மருத்துவக் குழுவினரின் தீவிர முயற்சியையும் தாண்டி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே, துப்பாக்கிக் காயத்துடன் மருத்துவமனைக்கு வந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கொலை சந்தேகத்தின் பேரில் போலிஸார் கைது செய்தனர். சிகிச்சை பெற்று வரும் அவர், போலிஸாரின் பலத்த காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் நண்பர்கள் மற்றும் சக பேருந்து ஓட்டுநர்கள் தெரிவிக்கையில், “அவர் மிகவும் அமைதியானவர், கடின உழைப்பாளி.
எந்தவொரு குற்றப் பின்னணியும் இல்லாத அவர், தவறான நேரத்தில் தவறான இடத்தில் இருந்ததாலேயே (Wrong Place at Wrong Time) இந்த கொடூர சம்பவத்திற்குப் பலியாகியுள்ளார்” என உருக்கமாகக் கூறினர்.
கொலைக்கான முகாந்திரம் மற்றும் பின்னணி குறித்துத் தலைமை துப்பறியும் அதிகாரி கிளேர் கைவர் (Claire Guiver) தலைமையிலான சிறப்புக் குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.