அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை நடுவே அதிரடி நகர்வு ; மர்ம விமானங்கள் தரையிறக்கம்
ஈரானில் இருந்து, பாகிஸ்தானின் ராவல்பிண்டி வானூர்தி நிலையத்தில் திடீரென மூன்று வானூர்திகள் தரையிறங்கியுள்ளன.
இது, இஸ்லாமாபாத்தில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இடம்பெறும் அமைதிப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக அல் ஜசீரா கூறுகிறது.
இந்த மூன்று வானூர்திகளும், ஈரானின் 'Pouya Air' நிறுவனத்திற்குச் சொந்தமானவை.

இந்த நிறுவனம் ஈரானிய புரட்சிகர இராணுவக் காவல்படையின் ஒரு அங்கமான 'குத்ஸ்' படைகளுக்கு ஆதரவாகச் செயல்படும் சரக்கு வானூர்தி நிறுவனம் எனக் கருதப்படுகிறது.
ஏற்கனவே 70க்கும் மேற்பட்ட ஈரானிய பிரதிநிதிகள் இஸ்லாமாபாத்தில் முகாமிட்டுள்ள நிலையில், பேச்சுவார்த்தை மிகவும் விரிவான மற்றும் தொழில்நுட்ப ரீதியான கட்டத்தை எட்டியுள்ளதால், மேலதிக நிபுணர்கள் வரவழைக்கப்பட்டிருக்கலாம் என ஈரானிய தரப்புகள்; தெரிவிக்கின்றன.
பேச்சுவார்த்தையின் அடிப்படையில், ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அமெரிக்கர்களை விடுவிக்க வேண்டும் என ட்ரம்ப் நிர்வாகம் கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளதாக 'வோஷிங்டன் போஸ்ட்' செய்தி வெளியிட்டிருந்தது.
எனவே, இந்த வானூர்திகளின் வருகை கைதிகள் பரிமாற்றம் தொடர்பான முன்னேற்றமாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஈரான் தூதுக்குழுக்கள் தங்கியுள்ள அதே வான்படை தளத்தில் இந்த வானூரதிகள் தரையிறங்கியுள்ளமை, ஒரு முக்கிய உடன்படிக்கை எட்டப்படுவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும், இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.