கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு மனித கடத்தல்: சிக்கிய மெக்சிக்கோ பிரஜைகள்
கனடாவில் இருந்து அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக மக்களை அழைத்து வந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்த மெக்சிகோவைச் சேர்ந்த மூவர் தங்களது குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான நபர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் ஊடுருவச் செய்த சர்வதேசக் கும்பலில் இந்த மூவருக்கும் தொடர்பிருப்பது அமெரிக்க நீதித் துறையால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக நபர்களைக் கடத்துவதற்கான சதித்திட்டம் தீட்டியது மற்றும் நிதி ஆதாயத்திற்காக நபர்களைக் கடத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை இவர்கள் மூவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இவர்களுக்கான தண்டனை விவரங்கள் வரும் நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்படவுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கு 5 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
இதே வழக்கில் தொடர்புடைய மற்றொரு இணை குற்றவாளி கடந்த மே மாதமே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். அவருக்குச் செப்டம்பர் மாதத்தில் தண்டனை அறிவிக்கப்பட உள்ளது.
வடக்கு நியூயார்க் மாநிலத்தில் இயங்கி வரும் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி இன்வெஸ்டிகேஷன்ஸ் மற்றும் அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து இந்த விரிவான விசாரணையை மேற்கொண்டன.
கனடா எல்லை வழியே நடைபெறும் சட்டவிரோதக் கடத்தல்களைத் தடுக்கும் நோக்கில் தீவிர நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.