கனடாவில் சோகம்: வீட்டின் நீச்சல் தடாகத்தில் விழுந்து 3 வயது சிறுவன் மரணம்!
கனடாவின் மொன்றியலுக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளெய்ன்வில் பகுதியில், வீட்டின் பின் பகுதியில் நீச்சல் தடாகத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட மூன்று வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் அவசர உதவிப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்குழுவினர், சிறுவனை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனைக் காணவில்லை எனத் தேடிய பெற்றோர், இறுதியாக நீச்சல் தடாகத்தில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து பிளெய்ன்வில் பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர் காக்கும் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் ரெய்னால்ட் ஹாக்கின்ஸ் தெரிவிக்கையில், 2026 ஆம் ஆண்டில் நிகழ்ந்த முதலாவது பச்சிளம் குழந்தை நீரில் மூழ்கி மரணித்த சம்பவம் இதுவாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கோடைகாலம் நெருங்குவதால், வீடுகளில் நீச்சல் தடாகம் வைத்திருப்பவர்கள் கூடுதல் பாதுகாப்பாக இருக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.