டொராண்டோவில் வேகக் கட்டுப்பாட்டு கேமராக்கள் மீது 300-க்கும் மேற்பட்ட தாக்குதல்
இந்த ஆண்டில் இதுவரை டொராண்டோவில் வேகக் கட்டுப்பாட்டு கமராக்கள் மீது 325 தாக்குதல் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ நகர நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
வேகக் கட்டுப்பாட்டு ஆட்டோமேட்டிக் கேமராக்கள் (Automated Speed Enforcement – ASE) மீதான குறித்த இந்த தாக்குதல்கள், நகரின் சாலை பாதுகாப்புக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவல்கள், வேகக் கட்டுப்பாட்டு கேமரா எண்ணிக்கையை 75இருந்து 150 ஆக இரட்டிப்பாக்கும் திட்டத்தை நகரம் அறிவித்திருந்ததைத் தொடர்ந்து சில வாரங்களுக்குள் வெளியாகியுள்ளது.
பார்க்சைட் டிரைவ் மற்றும் ஆல்கோன்கின் அவென்யூ அருகே உள்ள ஒரு பிரபலமான கேமரா, இதுவரை 66,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் வெளியிட்டு மில்லியன் கணக்கில் வருமானம் ஈட்டியிருந்தது.
அதே சமயம், இந்த கேமரா நான்கு முறை வெட்டப்பட்டு அகற்றப்பட்டது, இதில் ஒரு முறை அருகிலுள்ள குளத்துக்குள் எறியப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள புதிய தரவுகளின்படி, வேகக் கட்டுப்பாட்டு திட்டத்திற்கு எதிரான எதிர்ப்பு ஒரு பகுதியில் மட்டுமல்லாமல், நகரம் முழுவதும் பரவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு மட்டும் 12 கேமராக்கள் “முழுமையாக பழுதடைந்தவையாக” வகைப்படுத்தப்பட்டன.
ஒவ்வொரு கேமராவுக்கும் சுமார் 10,000 டொலர்கள் செலவாகும் என்று நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.