அல்பர்ட்டாவில் 3 கோடி டொலர் மதிப்புள்ள சட்டவிரோத சிகரெட்டுகள் பறிமுதல்
கனடாவின் மத்திய அல்பர்ட்டா பிராந்தியத்தில் பல மாதங்களாக நடத்தப்பட்ட ரகசிய புலனாய்வு விசாரணையைத் தொடர்ந்து, சுமார் 3 கோடி டொலர் சில்லறை மதிப்புடைய பல்லாயிரக்கணக்கான சட்டவிரோத சிகரெட்டுகளை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த ஜனவரி மாதம், வெஸ்ட்லாக் பகுதியில் நபர் ஒருவர் அரசு வரி முத்திரையிடப்படாத சிகரெட்டுகளை விற்பனை செய்வதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.
'தி புடீக்' என்ற கடையில் வாங்கப்பட்டதாக நபர் ஒருவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் கார்ட்டன் மூலம் இத்தகவல் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பல மாதங்களாக ரகசிய பொலிஸ் அதிகாரி ஒருவர் வாடிக்கையாளரைப் போலச் சென்று அந்த நிறுவனத்திலிருந்து சிகரெட்டுகளை வாங்கி விசாரணை நடத்தினார்.
ஜூன் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் பல சோதனையாணைகள் நிறைவேற்றப்பட்டு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சந்தேகநபரான விற்பனையாளர் கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்ட பின்னரும், அடுத்த இரண்டு மாதங்களில் அதே விற்பனையாளரிடமிருந்து ரகசிய அதிகாரி மேலும் இருமுறை சிகரெட்டுகளை வாங்கியுள்ளார்.
இதில் ஒரு கொள்முதல் மூலம், ஓகஸ்ட் மாத இறுதியில் மோரின்வில்லே மற்றும் எட்மண்டன் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது.
இரண்டாவது கொள்முதல் மூலம் வெஸ்ட்லாக் கவுண்டி கிராமப்புறப் பகுதியில் இருந்த ஒரு ரகசியக் களஞ்சியக்கூடம் கண்டுபிடிக்கப்பட்டு, செப்டம்பர் 15 அன்று அங்கு நடத்தப்பட்ட சோதனையில் சந்தேகநபர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக வெஸ்ட்லாக் பகுதியைச் சேர்ந்த 50 வயதான நபர் ஒருவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சந்தேகநபர் தற்போது நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் அக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.