ஹெய்ட்டியில் பொலிஸாரின் அதிரடியால் ஆபத்தான 34 பேர் ஒரே நாளில் கொலை
ஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் ஆயுதக் குற்றக் கும்பல்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட விசேட பொலிஸ் நடவடிக்கையில், கும்பல் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயுதக் கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்கும் நோக்கில், நேற்று (19) மார்டிசான்ட் பகுதியில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹெய்ட்டி அரசாங்கத்தின் விசேட அதிரடிப் படையினரின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த நடவடிக்கையில், வெடிபொருட்கள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்களும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின்போது பொலிஸாருக்கோ பொதுமக்களுக்கோ பாதிப்புகள் ஏற்படவில்லை.
இதேவேளை, இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஹெய்ட்டியில் இடம்பெற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளில் 2,250க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.