அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி வெளியேறிய 34 ஈரான் கப்பல்கள்
ஈரானின் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகை அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல், 34 ஈரான் கப்பல்கள் எல்லை தாண்டிச் சென்றுள்ளதாக பைனான்ஷியல் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹோர்முஸ் நீரிணை இப்போது அமெரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ஈரான் மீதான கடல்சார் முற்றுகை உத்தி 'மிகப்பெரிய வெற்றி' அடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

தடையை மீறிச் சென்ற 34 ஈரான் கப்பல்கள்
ஈரானுடன் "இறுதி ஒப்பந்தம்" எட்டப்படும் வரை இந்தத் தடைகள் நீக்கப்படாது என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். இந்நிலையில், பைனான்ஷியல் டைம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்காவின் இந்த முற்றுகையை மீறி ஈரானுடன் தொடர்புடைய சுமார் 34 கப்பல்கள் தடையின்றிப் பயணம் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முற்றுகையை மீறிச் சென்ற 34 கப்பல்களில் 19 கப்பல்கள் ஈரானுடன் தொடர்புடையவை.
இவை வளைகுடாவிலிருந்து வெளியேறிவிட்டன. ஏனைய 15 கப்பல்களும் அரபிக் கடலிலிருந்து வளைகுடாவுக்குள் நுழைந்து ஈரானை நோக்கிச் சென்றுள்ளன. வெளியேறிய கப்பல்களில் குறைந்தது 6 கப்பல்கள் ஈரானிய மசகு எண்ணெயை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த 6 கப்பல்களிலும் மொத்தமாக சுமார் 10.7 மில்லியன் பீப்பாய்களில் எண்ணெய் இருந்ததாகக் கூறப்படுகிறது. பொதுவாக ப்ரெண்ட் (Brent) மசகு எண்ணெய் விலையை விட, சர்வதேச பொருளாதாரத் தடைகள் காரணமாக ஈரானிய எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 10 டொலர் குறைவாக விற்கப்படுகிறது.
இந்த அடிப்படையில், தடையை மீறிச் சென்ற இந்த எண்ணெய் மூலமாக ஈரானுக்கு சுமார் 910 மில்லியன் டொலர் வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஏப்ரல் 13ஆம் திகதி ஈரான் மீதான பொருளாதார வர்த்தகத்தை முடக்கும் நோக்கில் அமெரிக்கா, ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவதாக அறிவித்தது.
போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படக்கூடிய பொருட்கள் மற்றும் மசகு எண்ணெய் பரிமாற்றத்தைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கம். முற்றுகையிட்டதிலிருந்து இதுவரை ஓமன் வளைகுடாவில் ஒரு சரக்குக் கப்பலை மட்டுமே அமெரிக்கப் படைகளால் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது.
இந்தோ - -பசிபிக் பிராந்தியத்தில் ஒரு எண்ணெய் கப்பல் சோதனையிடப்பட்டது. அதேவேளை இதுவரை ஹோர்முஸ் நீரிணையில் பயணிக்கவிருந்த 28 கப்பல்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகமானது (CENTCOM) தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஆபத்தான் சூழ்நிலைக்கும் மத்தியில் ஈரானுடன் தொடர்புடைய 34 கப்பல்கள் கடந்து சென்றிருப்பது சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.