விமான நிலைய மேற்கூரை விழுந்து மூவர் உயிரிழப்பு; விமான சேவை நிறுத்தம்
டெல்லி விமான நிலைய மேற்கூரை விழுந்து 6 பேர் காயமடைந்துள்ளதுடன் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் கொட்டித்தீர்க்கும் மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய மேற்கூரை சரிந்தது மட்டுமின்றி அதனை தாங்கியிருந்த பீமும் விழுந்ததில் பிக்-அப் மற்றும் டிராப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.
தற்காலிகமாக விமான சேவை நிறுத்தம்
இந்த சம்பவம் டெல்லி விமான நிலைய டெர்மினல் 1 பகுதியில் நடந்துள்ளது. மழை காரணமாக விமான சேவையும் தாமதம் அடைந்துள்ளதாக தகவல். இடிபாடுகளில் யாரேனும் சிக்கி இருக்கிறார்களா என்பதை டெல்லி தீயணைப்பு படையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
கூரை சரிந்து விழுந்ததில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலை 5.30 மணிக்கு இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதையடுத்து அங்கு அவர்கள் விரைந்துள்ளனர். பீம் சரிந்து விழுந்து சேதமடைந்த காரில் இருந்து ஒருவரை மீட்டுள்ளனர். பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த சம்பவத்தால் டெர்மினல் 1 பகுதியில் தற்காலிகமாக விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
செக்-இன் கவுண்டர்களும் மூடப்பட்டுள்ளன.
மேலும், இந்த சம்பவத்தை தனிப்பட்ட கவனத்தில் எடுத்துக் கொண்டு கண்காணித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இதனை அவர் எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.