இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் தூதரக அதிகாரிகள் நால்வர் பலி; கடும் எச்சரிக்கை
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த நான்கு தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐநாவுக்கான ஈரானின் தூதர் அமீர்-சயீத் இரவானி (Amir-Saeid Iravani), ஐநாவிடம் சமர்ப்பித்த கடிதத்தை மேற்கோள் காட்டி இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. பெய்ரூட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போதே ஈரான் தூதரக அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலை "திட்டமிடப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்" (A deliberate terrorist attack) என அமீர்-சயீத் இரவானி தனது கடிதத்தில் கடுமையாகச் சாடியுள்ளார்.
முன்னதாக, பெய்ரூட்டில் உள்ள ரமாடா (Ramada) ஹோட்டலில் ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) குத்ஸ் பிரிவின் (Quds Force) தளபதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது.
அதேவேளை லெபனானில் இருந்து ஈரானிய பிரதிநிதிகள் உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் கடந்த வாரம் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.