காதல் வலையில் வீழ்த்தி 10 லட்சம் டொலர் மோசடி செய்த நபர் கைது
கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்தில் ஐந்து பெண்களைக் காதலிப்பதாக ஏமாற்றி, 10 லட்சம் டாலருக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த 41 வயது நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
"புராஜெக்ட் மரூன்" என்ற சிறப்பு விசாரணை நடவடிக்கையின் முடிவுகள் குறித்து காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.
2025 நவம்பரில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரிலேயே இந்தத் திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. எனினும், சந்தேகநபர் 2020 முதலே இதுபோன்ற பொய் வாக்குறுதிகள் மற்றும் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஒன்டாரியோவின் மார்மோரா பகுதியைச் சேர்ந்த சால்வடோர் மலான்ட்ரினோ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவர் மீது 5,000 டொலருக்கும் அதிகமான பணமோசடி (5 வழக்குகள்), சட்டவிரோதப் பணப் பரிமாற்றம், பிணை உத்தரவை மீறியது மற்றும் போலி ஆவணங்களைத் தயாரித்தது உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக நடக்கும் ஆன்லைன் காதல் மோசடிகளைப் போலன்றி, மலான்ட்ரினோ பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து வலையில் வீழ்த்தியுள்ளார்.
தனது "ஃபிரண்ட்லி கே9" என்ற நாய் பயிற்சி மையம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றின் மூலம் பெண்களுடன் நட்பு ஏற்படுத்தியுள்ளார்.
தன்னை ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகக் காட்டிக்கொண்ட மலான்ட்ரினோ, தொழில் முதலீடு, கடன்கள் மற்றும் அவசர தேவைகள் எனக் கூறி பெருந்தொகையைப் பெற்றுள்ளார்.
பதிலுக்குத் திருமணம் செய்துகொள்வதாகவும், தொழிலில் பங்கு தருவதாகவும் உறுதியளித்து ஏமாற்றியுள்ளார்.
காவல்துறையினர் அவரது ஆயிரக்கணக்கான வங்கிப் பக்கங்களை ஆய்வு செய்ததில், பெண்களிடம் வாங்கிய பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது அம்பலமானது.
தனித்தனியாக ஏமாற்றப்பட்ட பல பெண்களின் வாக்குமூலங்கள் ஒரே மாதிரியாக இருந்ததால், இது ஒரு திட்டமிடப்பட்ட மோசடி என்பது உறுதி செய்யப்பட்டது.
மலான்ட்ரினோவால் ஏமாற்றப்பட்ட வேறு யாரேனும் இருந்தால், உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர் தற்போது காவல் பிணையில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.