டிரம்பின் சபதம்; ஹூண்டாய் தொழிற்சாலையில் 475 தொழிலாளர்கள் அதிரடியாக கைது
அமெரிக்காவின் அலபாமா மாகாண ஹூண்டாய் தொழிற்சாலையில், அமெரிக்க ICE அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 475 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று இரவு தொடங்கி விடிய விடிய இந்த சோதனை நடத்தப்பட்டது. இதன்போது சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி, போலி ஆவணங்களுடன் ஹூண்டாய் தொழிற்சாலையில் வேலை செய்துவந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களைக் குறிவைத்து இந்த சோதனை நடத்தப்பட்டதாக ICE அதிகாரிகள் தெரிவித்தனர்.
புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவோம்
இந்த அதிரடி நடவடிக்கையால் ஹூண்டாய் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதனால் தொழிலாளர்கள் இன்றி உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை வெளியேற்றுவோம் என்று பலமுறை சபதம் செய்திருந்தார்.
அந்த சபதத்தின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடத்தப்பட்டிருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த அதிரடி நடவடிக்கை அமெரிக்காவில் குடியுரிமை விவாதத்தை மீண்டும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.
அதேசமயம் கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு மேலும் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.