ஈக்வடாரில் 5 பொலிஸ் அதிகாரிகள் கொலை!
கைதிகள் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையில் 5 பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டது ஈக்வடார் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவாயாகுயில் பகுதியில் உள்ள சிறையில் இரு பிரிவு கைதிகளிடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த 200க்கும் மேற்பட்ட கைதிகளை பல்வேறு சிறைகளுக்கு மாற்ற ஈக்வடார் அரசு திட்டமிட்டது.
இதன் படி பல்வேறு கட்டங்களாக கைதிகள் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக விரோதிகள் கும்பல் ஒன்று குவாயாகுயில் சிறையை முற்றுகையிட்டு திடீர் தாக்குதலில் ஈடுபட்டது.
சிறை அருகே சுமார் 6 இடங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. பொலிசாரின் ரோந்து வாகனங்கள் மீதும் சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல்களில் பொலிஸ் அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த 15 பொலிஸ் மற்றும் சிறைத்துறை பொலிஸார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் சமூக விரோதிகளின் தாக்குதல்களை தடுக்கும் விதமாக குவாயாகுயில் சிறைக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.