கடலில் படகு விபத்துகளில், 500க்கும் மேற்பட்ட ஏதிலிகள் உயிரிழப்பு!
மியன்மார் கடல் பகுதியில் கடந்த ஜூன் மாத இறுதியில் இருந்து நிகழ்ந்ததாகக் கூறப்படும் இரண்டு பெரும் படகு விபத்துகளில், 500க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபை கவலை வெளியிட்டுள்ளது.
ஐ.நா.வின் சர்வதேச புலம்பெயர்வு அமைப்பு (IOM) மற்றும் அகதிகள் முகமை (UNHCR) ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிஞ்சா அகதிகளே பயணித்துள்ளனர்
போரினால் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாரின் ராகைன் (Rakhine) மாநிலத்தில் இருந்து ஜூன் மாத இறுதியில் புறப்பட்ட இரு படகுகளிலும், பெரும்பான்மையாக முஸ்லிம் சிறுபான்மையினரான ரோஹிஞ்சா அகதிகளே பயணித்துள்ளனர்.
இவர்களில் சிலர் பங்களாதேஷின் காக்ஸ் பஜார் (Cox’s Bazar) முகாம்களில் இருந்து பயணித்ததாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
250 பேருடன் சென்ற ஒரு படகு புறப்பட்ட சில நாட்களிலேயே தொடர்பை இழந்த நிலையில், 280 பேருடன் சென்ற மற்றுமொரு படகு ஜூலை 08ஆம் திகதி மியான்மரின் ஐயராவடி (Ayeyarwady) கடற்பரப்பில் மூழ்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
மோசமான காலநிலை நிலவும் பருவத்திற்கு வெளியில், அண்மைய பெருமழை மற்றும் வெள்ளப் பெருக்குக்கு மத்தியில் இந்த ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மியான்மரில் நீடிக்கும் உள்நாட்டு மோதல்கள், மோசமடைந்து வரும் மனிதாபிமான சூழ்நிலை மற்றும் பங்களாதேஷ் முகாம்களில் நிலவும் வரையறுக்கப்பட்ட வசதிகள் காரணமாகவே அகதிகள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்கி ஆபத்தான பயணங்களை மேற்கொள்வதாக ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.
தேடல் மற்றும் மீட்புப் பணிகளை வலுப்படுத்துமாறும், கடத்தல் நெட்வொர்க்குகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறும் சர்வதேச சமூகத்திற்கு ஐ.நா கோரிக்கை விடுத்துள்ளது.