முதல் ஆறு மாதங்களில் கையூட்டல் பெற்ற 34 பேர் கைது
இலங்கையில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கையூட்டல் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைகயூட்டல், ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை கையூட்டல் மற்றும் ஊழல் மோசடிகள் தொடர்பில் 3022 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் 54 சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை காவல்துறையை சேர்ந்த 10 பேர், நீதித்துறை அமைச்சின் அதிகாரிகள் 5 பேர், சுகாதார அமைச்சின் அதிகாரிகள் 2 பேர், இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள் 2 பேர் உள்ளடங்குகின்றனர்.
மேலும் இவ்வாறு கைதானவர்களில் ஆறு பொதுமக்களும் உள்ளடங்குவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் நாட்டின் பல நீதிமன்றங்களில் ஊழல் சம்பந்தமான 50 வழக்குகள் 60 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இதே காலப்பகுதியில் 6 வழக்குகள் முடிவடைந்துள்ளன. தற்போது நாட்டில் மொத்தம் 273 ஊழல் வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்த ஆண்டு முதல் 6 மாதங்களில் போதைப்பொருள் குற்றச்செயல்களில் தொடர்புடைய 122913 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.