6,000 வீடுகளிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்ட மக்கள் ; அமெரிக்காவில் மோசமடையும் நிலை
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் தற்போது கடுமையான காட்டுத்தீ பரவி வரும் நிலையில, வெப்பமான வறண்ட வானிலை மற்றும் பலத்த சாண்டா அனா காற்று காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை (16) இந்தத் தீ கட்டுக்கடங்காமல் தீவிரமடைந்துள்ளது.
நேற்று மாலையில் சுமார் 6,000 வீடுகளும் 16,000 குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடுமையான காட்டுத்தீயால் சுமார் 188 ஹெக்டேர் (465 ஏக்கர்) பரப்பளவை எரித்துள்ளதாக தீயணைப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
நார்டே தீ என்ற காட்டுத்தீ சான் கிளெமென்டே என்ற கடலோர நகரில் தொடங்கி, சான் ஜுவான் கேபிஸ்ட்ரானோ நகருக்குப் பரவியுள்ளது. நேற்று மாலையில் சுமார் 6,000 வீடுகளும் 16,000 குடியிருப்பாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், ஒவ்வொரு நகரிலும் தற்காலிகப் புகலிடங்கள் திறக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தென்மேற்கு அமெரிக்க உட்பகுதியிலிருந்து கலிபோர்னியா கடற்கரையை நோக்கி வீசும் பலமான வெப்பக் காற்றான சாண்டா அனா காற்றினால் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பல காட்டுத்தீகளில் நார்டே தீயும் ஒன்றாகும்.
கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 கிலோ மீற்றர் முதல் 90 கிலோ மீற்றர் (மணிக்கு 35 மைல் முதல் 55 மைல்) வேகத்தில் காற்று வீசியதாக வானிலை கணிப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பலத்த காற்றினால் மின்கம்பிகள் விழுந்து மேலும் தீ பரவாமல் தடுக்க, மின் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான வீடுகளுக்கான மின் இணைப்பைத் துண்டித்துள்ளன.
அமெரிக்க தேசிய வானிலை சேவை , லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் வென்ச்சுரா உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு 'ரெட் ஃபிளாக்' (Red Flag) எனப்படும் அதீத அபாய எச்சரிக்கையை இன்று சனிக்கிழமை ( 17) இரவு வேளை வரை நீடித்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகத் தீயணைப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்" என்று தீயணைப்பு ஆணையம் தெரிவித்துள்ளதோடு, பொதுமக்கள் அனைவரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.