டொரோண்டோவில் சிறுவர் பாலியல் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 6 பேர் கைது
டொரோண்டோ பெரும்பாக பகுதியைச் சேர்ந்த ஆறு பேர், சிறுவர் பாலியல் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாலியல் சேவைக்காக சிறார்களுடன் சந்திப்புகளை ஏற்பாடு செய்ததாகக் இந்த நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
“Project Firebird” புரொஜெக்ட் பயர்பேர்ட் எனப்படும் சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்திட்டம், “சிறார்களிடமிருந்து பாலியல் சேவைகளை வாங்குதல்” போன்ற குற்றங்களை தடுக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில், தாங்கள் தொடர்பு கொண்டிருந்தவர்கள் சிறார்கள் என்பதை அறிந்திருந்த போதிலும், பலர் சந்திப்புகளை ஏற்பாடு செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
22 வயதுடைய மனீஷ் சிங் (பிராம்ப்டன்), 50 வயதுடைய புரூஸ் ஹெரிங்டன் (அஜாக்ஸ்), 24 வயதுடைய நிக்கோலஸ் சென் (மார்கம்), 33 வயதுடைய சரங் கப்டி (பிக்கரிங்), 27 வயதுடைய லியோடி அயோயாவ் (ஒஷாவா), 39 வயதுடைய கிரிஸ்டோபர் ஸ்மித் (ஒஷாவா) ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 வயதுக்குட்பட்ட நபரை பாலியல் சேவைக்காக தூண்டுதல், 18 வயதுக்குட்பட்டவரிடமிருந்து பாலியல் சேவை பெறுதல், உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நிக்கோலஸ் சென் மீது காவல்துறைக்கு இடையூறு விளைவித்தது தொடர்பான கூடுதல் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
காவல்துறை தகவலின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் உறுதிமொழி அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.