கனடாவில் காவல்துறை உத்தியோகத்தர்கள் 6 பேரின் பணி இடைநீக்கம்
ஊழல் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் தொடர்பான அதிரடி விசாரணையில் சிக்கிய டொராண்டோ காவல்துறையைச் சேர்ந்த ஆறு அதிகாரிகளுக்கு இனி ஊதியம் வழங்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கான்ஸ்டபிள்கள் திமோதி பார்ன்ஹார்ட், ஜான் மேட்லி ஜூனியர், சௌரப்ஜித் பேடி, எலியாஸ் மௌவாட் மற்றும் சார்ஜென்ட்கள் ராபர்ட் பிளாக், கார்ல் கிரெலட் ஆகியோர் விசாரணை முடியும் வரை ஊதியமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஏமி டேவி உறுதிப்படுத்தியுள்ளார்.
இவர்களுடன் தொடர்புடைய ஏழாவது அதிகாரியான டெரெக் மெக்கார்மிக், ஆரம்பத்தில் ஊதியத்துடன் கூடிய பணிநீக்கத்தில் இருந்த நிலையில், எதிர்வரும் மே 1 முதல் அவருக்கும் ஊதியம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புராஜெக்ட் சவுத்" (Project South) என்று பெயரிடப்பட்ட இந்த விசாரணையில், சம்பந்தப்பட்ட ஏழு அதிகாரிகள் மீதும் மொத்தம் 41 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சிறைச்சாலை அதிகாரி ஒருவருக்கு எதிரான கொலைத் திட்டத்திற்கு ரகசியத் தகவல்களை வழங்கி உதவியது, லஞ்சம் வாங்கியது, போதைப்பொருள் கடத்தல்காரர்களின் சட்டவிரோத கஞ்சா விற்பனை நிலையங்களுக்குப் பாதுகாப்பு அளித்தது மற்றும் அடையாளத் திருட்டு போன்ற அதிர்ச்சியூட்டும் புகார்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் நான்கு அதிகாரிகளுக்கு மட்டுமே ஊதியமில்லா பணிநீக்கத்தை அமல்படுத்தத் திட்டமிட்டிருந்த காவல்துறை தலைமை அதிகாரி மைரன் டெம்கிவ், பின்னர் ஏழு பேருக்கும் அதே நடவடிக்கையை எடுக்க முடிவு செய்துள்ளார்.