கனடாவில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுவன் பரிதாபமாக பலி!
கனடாவின் வடமேற்கு பிரதேசத்தில் உள்ள பெச்சோகோ பழங்குடியின சமூகப் பகுதியில் சனிக்கிழமை இரவு நடந்த பயங்கர ஏடிவி ரக மோட்டார் வாகன விபத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இரு சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இது குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள கனடா ராயல் மவுண்டட் பொலிஸார், சனிக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் தங்களுக்கு இந்த விபத்து குறித்த அவசரத் தகவல் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்குப் பொலிஸாரும் மீட்புக்குழுவினரும் விரைந்து சென்றபோது, விபத்தில் சிக்கிய 6 வயது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்த 11 வயது சிறுவனுக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
எனினும், படுகாயமடைந்த மற்றொரு 8 வயது சிறுவன், மேல் சிகிச்சைக்காக அவசர அவசரமாக அண்டை மாகாண விசேட வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
விசாரணையில், விபத்தில் சிக்கிய மூன்று சிறுவர்களும் விபத்தின் போது தலைக்கவசம் (Helmet) அணிந்திருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
கனடா நாட்டின் சட்டப்படி, இத்தகைய ஏடிவி (ATV) ரக கரடுமுரடான பாதைகளில் செல்லும் வாகனங்களை ஓட்டுபவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் மற்றும் அவர்களின் வயது குறைந்தது 16 ஆக இருக்க வேண்டும் என்பது விதியாகும்.
ஆனால், விதிகளை மீறி சிறியவர்கள் இந்த வாகனத்தைச் செலுத்தியதே இந்த உயிரிழப்புக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.