டொராண்டோவில் வீதி விபத்து: 61 வயது நபர் பலி
டொராண்டோவில் உள்ள ஹைவே 404 நெடுஞ்சாலையில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 61 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை காலை 6:50 மணியளவில் ஸ்டீல்ஸ் அவென்யூவிற்கு தெற்கே உள்ள ஹைவே 404 இன் தெற்கு நோக்கிய பாதைகளில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த டொராண்டோவைச் சேர்ந்த 61 வயது நபர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான ஒரு வாகனத்தில் அவர் மட்டுமே பயணித்துள்ளார்.

மற்றொரு வாகனத்தைச் சேர்ந்த ஓட்டுநர் லேசான காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரும் வாகனத்தில் தனியாகவே பயணித்துள்ளார்.
இவ்விபத்து தொடர்பான சாட்சிகள் அல்லது அப்பகுதியில் விபத்து நடந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட டேஷ்கேம் காணொளிகள் வைத்துள்ள எவரும் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.