உடல் எடையை குறைக்க அறுவை சிகிச்சை: உயிரிழந்த 7 பிரித்தானிய பிரஜைகள்!
துருக்கியில் உடல் எடையை குறைக்கும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட ஏழு பிரித்தானிய பிரஜைகள் மரணமடைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
மேலும் சிலர் மிக மோசமான உடல்நலப் பிரச்சினைகளுக்குள்ளாகியிருக்கின்றனர்.
அறுவைச் சிகிச்சையின்போது 70 சதவீதமானவர்களுக்கு வயிற்றுப் பகுதி அகற்றப்படுகிறது. மிகக் கடுமையான உடல் பருமன் பிரச்சினையைக் கொண்டவர்களுக்குப் பிரித்தானியாவில் அந்த அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இருப்பினும், அங்குள்ள மருத்துவமனைகளில் அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள நீண்டகாலம் காத்திருக்க வேண்டும் என்பதால் சிலர் குறுக்கு வழியாக வெளிநாடுகளில் அதனை மேற்கொள்ள விரும்புகின்றனர்.
சமீப ஆண்டுகளில் மக்கள் மத்தியில் அந்த எண்ணத்தை விதைப்பதில் பல சமூக வலைத்தள விளம்பரங்களும் முக்கியப் பங்காற்றிவருகின்றன.
இதற்கிடையே, துருக்கியில் அறுவைச் சிகிச்சை செய்து மோசமான பக்கவிளைவுகளுடன் பிரித்தானியாவுக்கு திரும்புவோரின் எண்ணிக்கை கூடி வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதுவரை எத்தனை பிரித்தானிய மக்கள் அந்த அறுவைச் சிகிச்சைக்காகத் துருக்கி சென்றனர் என்ற அதிகாரப்பூர்வத் தகவல் இல்லை.
ஆனால் 2019 இல் இருந்து இதுவரை அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 7 பேர் மரணமடைந்துள்ளனர் என்பது மட்டும் தெரியும் என செய்தி வெளியாகியுள்ளது.