ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 7 இலங்கையர்கள் நாடு கடத்தல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அந்த நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கை இளைஞர்கள் நேற்று (27) இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் தொடர்பான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைத் தங்களது வசம் வைத்திருந்தமை மற்றும் அவற்றிற்கு சமூக வலைத்தளங்களில் 'விருப்பம்' (Like) தெரிவித்து, 'கருத்துக்களை' (Comments) பதிவிட்டமை ஆகிய காரணங்களுக்காகவே இந்த இளைஞர்கள் அபுதாபி பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு நாடு கடத்தப்பட்டவர்கள் 23 முதல் 33 வயதுக்கு இடைப்பட்ட அம்பலாங்கொடை, மாரப்பன, பொரள்ளை, பண்டாரகம, பொலன்னறுவை மற்றும் வத்தளை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்த சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், விமான நிலைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து அவர்களிடம் நீண்டநேர தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.