ஏரியில் நீந்திய 8 வயது சிறுமி அரிய வகை தொற்றினால் பரிதாப மரணம்
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில் ஏரியில் நீந்தியபோது அரிய வகை உயிர்க்கொல்லி அமீபா தொற்றுக்கு உள்ளானதாகக் கருதப்படும் 8 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
வடக்கு லூசியானாவின் ருஸ்டொன் பகுதியைச் சேர்ந்த லில்லியன் ஸ்மார்ட் என்ற சிறுமி, தனது 8ஆவது பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளான சனிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Naegleria fowleri எனப்படும் இந்த நுண்ணுயிரி பொதுவாக “மூளையை உண்ணும் அமீபா” என அழைக்கப்படுகிறது.

லிலியன் இந்த அமீபா தொற்றை க்ளேய்போர்ன் ஏரியில் நீந்தியபோது பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. அந்த ஏரி ருஸ்டன் நகரிலிருந்து சுமார் 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையில், அமீபா தொற்றினால் சிறுமியின் மூளையில் ஏற்பட்ட பாதிப்பு மிகவும் தீவிரமாக இருந்ததால் அவர் குணமடைய முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
லிலியன் கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரது உடல்நிலை வேகமாக மோசமடைந்து, இரட்டைப் பார்வை உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Naegleria fowleri பொதுவாக வெப்பமான நன்னீர் ஏரிகள், ஆறுகள் மற்றும் குளங்கள் போன்ற இடங்களில் காணப்படும். அமீபா கலந்த நீர் மூக்கின் வழியாக உடலுக்குள் சென்று மூளையை அடையும் போது தீவிர மூளைத் தொற்று ஏற்படலாம்.
இந்தத் தொற்று நீரை விழுங்குவதன் மூலம் ஏற்படாது என்பதுடன், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் பரவாது. ஆரம்ப அறிகுறிகளில் தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை காணப்படலாம்.
பின்னர் கழுத்து இறுக்கம், குழப்பநிலை, சமநிலை இழப்பு உள்ளிட்ட தீவிர அறிகுறிகள் வேகமாக உருவாகக்கூடும்.
அண்மைய ஆண்டுகளில் வெப்பநிலை அதிகரிப்பால் வடக்கு மற்றும் மத்திய அமெரிக்கப் பகுதிகளிலும் வெப்பமான நன்னீர் பரவலாகி வருவதால், இந்த அமீபா காணப்படும் பகுதிகள் விரிவடையக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.