பிரிட்டிஷ் கொலம்பியாவின் மிகப்பெரிய லொத்தர் சீட்டு வெற்றியாளர்
பிரிட்டிஷ் கொலம்பியாவின் (B.C.) வரலாற்றில் இதுவரை பதிவான மிகப்பெரிய லொத்தர் சீட்டு வெற்றியின் அதிர்ஷ்டசாலியாக சர்ரி நகரைச் சேர்ந்த ஜஸ்டின் சிம்போரியோஸ் (Justin Simporios), 35 வயது, கடந்த வியாழக்கிழமை (மே 15) அறிவிக்கப்பட்டுள்ளார்.
மே 9 அன்று நடைபெற்ற லொட்டோ மெக்ஸ் ஜாக்பொட் சீட்டிலுப்பில், எல்லா ஏழு எண்களையும் சரியாக பொருந்தி 80 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றுள்ளார்.
இதற்கு முன்னர் இதே அளவு பரிசு இருமுறை வழங்கப்பட்டாலும், அவை இருவருக்குள் பகிர்ந்துக்கொள்ள வேண்டியிருந்தது.
அந்த நாளில் சென்ட்ரல் சிட்டி மாலில் உள்ள Walmart கடையில் பர்கர் செய்முறைப் பொருட்கள் வாங்கும்போதே சீட்டை வாங்கியதாகவும், அதே நாளில் அவரது மகளுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் குடும்பத்தினர் விரைவில் உறங்கியதாகவும் சிம்போரியோஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.
அந்த பரிசு சர்ரியில் வென்றதாக செய்திகள் வந்தபோது, “நாம் கோடீஸ்வரர்களாக மாறியிருக்கிறோம்” என்று மனைவியிடம் நகைச்சுவையாக கூறியதாகவும், அதனால் மனைவி கோபப்பட்டதாகவும் கூறினார்.
பின்னர், ஒரு டார்ச் ஒளியின் உதவியுடன் சீட்டின் எண்களை சரிபார்த்தபோது உண்மைதான் தெரிய வந்தது என தெரிவித்துள்ளார்.
“நான் கத்தினேன், அழுதேன், விளக்கை எரிய விட்டேன் – மனைவி மறுபடியும் கோபப்பட்டாள்,” என்று சிம்போரியோஸ் நகைச்சுவையாக கூறினார்.
நம் வாழ்க்கை முழுவதும் மாறப்போகுது என்று தாம் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
பணியை ராஜினாமா செய்ததாகவும், குடும்பத்தினருக்கு நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கப் போவதாகவும் சிம்போரியோஸ் தெரிவித்துள்ளார்.