30 ஆண்டு கால நட்பிற்கு கிடைத்த 'பரிசு'! 80 மில்லியன் டொலர் வென்ற நண்பர்கள்
கனடாவின் ஒன்றாரியோ லண்டனில், முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பழகிய இரு நண்பர்களுக்கு ஒரு மெகா ஜாக்பாட் பரிசு கிடைக்கப் பெற்றமை லண்டன் நகரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
1990-களில் கனடாவிற்குப் புலம்பெயர்ந்த கிரெக் மற்றும் கிரிஸ் ஆகிய இரு நண்பர்களே அந்த அதிர்ஷ்டசாலிகளாவர்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவிலிருந்து கனடாவிற்கு குடிபெயர்ந்த போது, ஆங்கிலம் கற்கச் சென்ற 'ESL' வகுப்பில்தான் இவர்கள் இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

அன்று முதல் இன்று வரை மாறாத நட்புடன் இருந்து வரும் இவர்கள், கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒன்றாகச் சேர்ந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி வந்துள்ளனர்.
வழக்கமாக அதிக பரிசுத் தொகை இருக்கும் நேரங்களில் மட்டும் டிக்கெட் வாங்கும் இவர்கள், இந்த முறை 80 மில்லியன் டாலர் (சுமார் 8 கோடி டாலர்) ஜாக்பாட்டை வென்றுள்ளனர்.
இந்த வெற்றியைச் சரிபார்த்த விதம் குறித்து கிரெக் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்: நான் இன்றுள்ள நவீன செயலிகளை விட, பழைய பாணியில் ஒரு பேனாவை எடுத்து காகிதத்தில் எண்களைச் சரிபார்ப்பதையே விரும்புவேன். ஒவ்வொன்றாக வட்டமிட்டு வந்த எனக்கு, கடைசியில் எல்லா எண்களும் பொருந்தியதைக் கண்டபோது என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை என கிரேக் தெரிவித்துள்ளார்.
இந்த இரு நண்பர்களுமே மிகச் சாதாரணப் பின்னணியைக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வாழ்க்கையின் பெரும்பகுதியை உழைப்பிலேயே செலவிட்ட இந்த நண்பர்கள், தங்களுக்குக் கிடைத்த இந்தப் பெருந்தொகையை சரியான முறையில் செலவிட விரும்புகின்றனர்.