இங்கிலாந்தில் 82 வயது தாத்தாவை தூக்கி வீசிய கார்
விபத்து ஏற்படுவது என்பது எப்போதுமே துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை தான். ஆனால் அப்படியான விபத்தில் கூட 'கோல்டன் ஹவர்' என்கிற வார்த்தை பிரயோகம் உள்ளது.
ஒரு விபத்து ஏற்பட்டதுமே உடனடியாக மேற்கொள்ளப்படும் அவசியமான மற்றும் உடனடி மருத்துவ கவனிப்பானது, விபத்தில் பாதிக்கப்பட்டவரின் உயிரை காப்பாற்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
அதிலும் குறிப்பாக ஒரு அதிர்ச்சிகரமான விபத்துக்கு பின் வரும் முதல் மணிநேரம் தான் - கோல்டன் ஹவர் என்று குறிப்பிடப்படுகிறது.
அதற்குள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தவறினால் உயிர்சேதம் ஏற்படக்கூடும்.
ஆனால் இங்கிலாந்தில் ஒரு விபத்திற்கு பின்னர் "எதுவுமே செய்யாமல் இருந்த" காரணத்திற்காகவே ஒரு உயிர் காப்பாற்றப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
கிடர்மின்ஸ்டரை சேர்ந்த 82 வயது முதியவரான டோனி ஜான்சி, கடந்த (19.01.2024) கார் விபத்து ஒன்றை சந்தித்துள்ளார்.
உள்ளூர் பல்பொருள் அங்காடியில் நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறுவதற்காக தெருவைக் கடக்கும்போது, ரவுண்டானா விதிகளை கடைப்பிடிக்காத ஒரு கார் அவரை மோதியது.
இங்கிலாந்த்து நாட்டில் சுற்றுப்பாதைகள் மிகவும் பாதுகாப்பானவை என்கிற பொதுவான நம்பிக்கை இருந்தபோதிலும், டோனி ஜான்சிக்கு நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான நிகழ்வானது, விபத்துக்கள் எங்கேயும் எப்படியும் நிகழக்கூடும் என்பதை நிரூபிக்கிறது.
டோனி ஜான்சி மீது கார் மோதியதும், அவரது கையில் இருந்த ஆப்பிள் வாட்ச் (Apple Watch) ஆனது அவர் தாக்கப்பட்டதை உணர்ந்து, அவர் கீழே விழுந்ததை (Fall Detection) கண்டறிந்து, அவசர சேவைகளை அழைக்க வேண்டுமா என்று தானாகவே கேட்டது.
டோனி ஜான்சியோ ஆப்பிள் வாட்சின் அலெர்ட்-ஐ மூவ் செய்யவோ அல்லது கேன்சல் செய்யவோ முடியாமல்
அதாவது "எதுவுமே செய்யாமல் இருந்த" காரணத்தினால், அவரது ஆப்பிள் வாட்ச் ஆனது தானாகவே உதவிக்கு அழைத்தது. ஆப்பிள் வாட்சின் இந்த வேகமான நடவடிக்கையானது முக்கியமான நேரத்தில் ஜான்சிக்கு தேவையான உதவியை வரவழைத்து, அவரது உயிரை காப்பாற்றியுள்ளது.
இந்த விபத்தில் டோனி ஜான்சிக்கு தோள்பட்டை எலும்பு உடைந்தது மற்றும் விலா எலும்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இது தவிர்த்து சிறிய காயங்களும் ஏற்பட்டு உள்ளது.
இந்த இடத்தில், டோனி ஜான்சிக்கு கிறிஸ்துமஸ் பரிசாசாக கிடைத்ததே ஆப்பிள் வாட்ச் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு ஒழுங்கற்ற இதயத் துடிப்பைக் கண்டறியும் ஆப்பிள் வாட்ச் அம்சமானது கண்டறியப்படாத இதய நோயால் பாதிக்கப்பட்ட 36 வயது நபரின் உயிரை காப்பாற்றியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சுவாரசியமாக இந்த சம்பவம் நடந்ததும் கூட இங்கிலாந்தில் தான். பிபிசியின் கூற்றுப்படி, ஆடம் கிராஃப்ட் விழித்தபோது, அவரது இதயம் ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் அல்லது ஏபிஃப்-இல் (Atrial fibrillation or AFib) இருப்பதாக இரவு முழுவதும் அவரது கடிகாரம் அவரை எச்சரித்துள்ளதை கண்டார், அதாவது அவரது இதயத் துடிப்பு சீராக இல்லை.
உடனடியாக யுகே மருத்துவ உதவி எண் 111-ஐ அழைத்தார், பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டார்.
மேற்கொண்டு பெட்ஃபோர்ட் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சோதனையில், ஆடம் கிராஃப்ட்டிற்கு ஏபிஃப் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து பேசியபோது தனது ஆப்பிள் வாட்சிலிருந்து எச்சரிக்கை பெறவில்லை என்றால் தான் மருத்துவமனைக்கு சென்றிருக்க மாட்டார் என்று ஆடம் கிராஃப்ட கூறினார்.
ஆப்பிள் நிறுவனமானது அதன் ஆப்பிள் வாட்ச் உட்பட அதன் டிவைஸ்களில் ஆரோக்கிய தொடர்பான அம்சங்களை மேம்படுத்த செயல்பட்டு வருகிறது.
2018-ல், ஆப்பிள் நிறுவனம் அதன் இசிஜி ஆப்பிற்கான எஃப்டிஏ (FDA) அனுமதியை பெற்றது, இதனால் ஏபிஃப்-ஐ கண்டறிய முடியும். அப்போதிருந்து, ஆப்பிள் தனது டிவைஸ்களில் ப்ளட் ஆக்ஸிஜன் கண்காணிப்பு மற்றும் பால் டிடெக்ஷன் (Fall detection) உள்ளிட்ட புதிய சுகாதார அம்சங்களை சேர்த்தது.
ஸ்மார்ட்வாட்ச்கள் எவ்வாறு உடனடி அலெர்ட்களில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதற்கான எண்ணற்ற நிகழ்வுகளை நாம் பார்த்து இருக்கிறோம்.
மேலும் இதுபோன்ற சம்பவங்கள் தங்கள் குடும்பம் / சமூகத்தை சேர்ந்த வயதான ஆட்களுக்கு ஸ்மார்ட்வாட்ச்களை வாங்கி கொடுக்கும் பழக்கத்தை அதிகமாக்கும்; மக்களை ஊக்குவிக்கும் என்பதிலும் சந்தேகமே வேண்டாம்.