90 வயதில் பியானோ வாசித்து அசத்தும் முதியவர்; குவியும் பாராட்டுகள்
கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தின் லூட்ஸ் மவுண்டன் பகுதியைச் சேர்ந்த, விரைவில் 90 வயதை எட்டவுள்ள செட்ரிக் லாண்டர்ஸ் இன்று சமூக வலைதளங்களில் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளார்.
வாழ்நாள் முழுவதும் இசையுடன் பயணித்த இவர், தற்போது ஒரே இரவில் இணையப் பிரபலமாக மாறியுள்ளார்.
70 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வரும் தனது மனைவி மரீனாவிற்காக தினமும் பியானோ வாசிப்பதனை லாண்டர்ஸ் வழக்கமாக கொண்டுள்ளார்.

அவர் வாசிக்கும் பழமையான தேவாலயப் பாடல்களை (Hymns) குடும்பத்தின் உதவியுடன் சமூக வலைதளங்களில் பகிரத் தொடங்கியதிலிருந்தே இந்த எதிர்பாராத புகழ் கிடைக்கத் தொடங்கியுள்ளது.
லாண்டர்ஸின் மகள் லோரலீ ட்ரூஆர்ட், தந்தை வாசிக்கும் வீடியோக்களை முதலில் பேஸ்புக்கில் பகிர்ந்தார்.
குடும்பத்தினரும் தேவாலய நண்பர்களும் அளித்த பேராதரவைத் தொடர்ந்து, “இவரது இசை இன்னும் பலரிடம் சேர வேண்டும்” என்ற எண்ணத்தில் கடந்த டிசம்பர் 30-ஆம் திகதி இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினார்.
இதன் விளைவாக, சில நாட்களிலேயே லாண்டர்ஸின் இன்ஸ்டாகிராம் கணக்கு 10,000-க்கும் மேற்பட்ட பின்தொடர்பாளர்களையும், 13 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது.
தென் கொரியா, அயர்லாந்து, இத்தாலி, பிரான்ஸ், உக்ரைன், பிரேசில், அர்ஜென்டினா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து அவரது இசையை மக்கள் ரசித்து வருகின்றனர். “இது உண்மையிலேயே நடக்கிறது என்பதை இன்னும் நம்ப முடியவில்லை,” என லாண்டர்ஸ் கூறுகின்றார்.
இத்தனை பேர் கேட்கிறார்கள் என்பது ஆச்சரியம். எனக்கு எப்போதும் நான் ஒரு ஆர்கன் வாசிப்பாளர்தான் என்ற எண்ணமே இருந்தது; பியானோ வாசிப்பாளராக என்னை நினைத்ததே இல்லை என குறிப்பிடுகின்றார்.
உலகம் முழுவதும் தனது இசை ஒலிக்கிறது என்பதை இன்னும் ஆச்சரியத்துடன் பார்க்கும் லாண்டர்ஸ், “மக்கள் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அது அவர்களுக்கு நன்றாகக் கேட்கிறது போல. அந்த இசை அவர்களின் மனதைத் தொடுகிறதென்றால், அதுவே எனக்கு போதும்,” என மனநிறைவுடன் கூறுகின்றார்.