நாடொன்றில் தூக்கிடப்பட்ட 31 வயது இந்தியர்!
இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கல்வந்த் சிங் எனும் நபர் போதை வஸ்து கடத்தல் குற்றச்சாட்டில் நேற்று சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார். மலேசியாவில் பிறந்து வளர்ந்த 31 வயதான கல்வந்த் சிங், இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டவராகும்.
கல்வந்த் சிங் 181.05 கிராம் ஹெராயின் வைத்திருந்ததாக சுமத்தப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளில் 2016 ஜூன் மாதம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. ஹெராயின் கடத்தல் குற்றச்சாட்டில் முகமது யாசித் எம்டி யூசோப் மற்றும் நோராஷரீ கௌஸ் ஆகிய மேலும் இரு நபர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதில் யாசித் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், 15 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டது. எனினும் , கல்வந்த் சிங் மற்றும் நோராஷரீ கௌஸ் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதை எதிர்த்து இருவரும் செய்த மேல் முறையீடு 2017ம் ஆண்டு மார்ச் மாதம் நிராகரிக்கப்பட்டது. எனவே, 2022 ஜுலை 7ம் திகதி தூக்கு முடிவு செய்யப்பட்டது.
இந்த சூழலில், கடைசி முயற்சியாக கல்வந்த் சிங் தனது மரணதண்டனைக்கு தடை கோரி நேற்று முன்தினம் விண்ணப்பித்ததுடன் , தனது வழக்கை தானே வாதிட விரும்புவதாகவும் கூறினார். எனினும் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை கல்வந்த் சிங் தூக்கிலிடப்பட்டார்.
இந்நிலையில், தூக்கு தண்டனைக்கு முன்பு கடைசியாக எடுக்கப்பட்ட Photoshoot-ல் எடுத்த கல்வந்த் சிங் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை சிங்கப்பூரின் சமூக ஆர்வலர் கோகிலா அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடைசியாக கல்வந்த்தை சந்தித்த போது அவரது குடும்பத்தினர் நான்கு புதிய உடைகள் மற்றும் ஷூஸ் வாங்கிக் கொடுத்துள்ளனர். அந்த புதிய உடையை அணிந்து தான் புகைப்படம் எடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
இறுதியாக தூக்கு மேடைக்கு செல்லும் முன், தனது வழக்கறிஞரிடம், “எல்லாவற்றுக்கும் நன்றி சார். உங்களுடைய எதிர்காலம் சிறக்க எனது வாழ்த்த்துகள்” என கூறி கல்வந்த் சிங் விடைபெற்றதாக கூறப்படுகின்றது.