திருமணத்தில் அழையா விருந்தாளியாக நுழைந்த கரடியால் பரபரப்பு!
அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் ஒரு இளம்ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இதையொட்டி வரவேற்பு விழாவும் தடபுடலாக நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக விருந்தினர்கள் திரளாக வந்திருந்தனர்.
அவர்களுக்காக பல்வேறு இனிப்பு வகைகள் மற்றும் விதவிதமான உணவு பண்டங்கள் தயார் செய்யப்பட்டு மேஜையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எதிர்பாராதவிதமாக திருமண வரவேற்பு விழா நடைபெறும் இடத்திற்குள் கரடி புகுந்து விட்டது.
இனிப்புகள் மற்றும் உணவு பண்டங்களை உண்ட கரடி
இதைப்பார்த்த விருந்தினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கரடியை கண்டு அச்சத்தில் அங்கும் இங்குமாக ஓடி தப்பிய நிலையில் கரடி நேராக அங்கு மேஜையில் வைக்கப்பட்டிருந்த இனிப்புகள் மற்றும் உணவு பண்டங்களை எடுத்து சாப்பிட்டுள்ளது.
பின்னர் பாதுகாப்பு படையினர் அங்கு விரைந்து வந்து கரடியை விரட்டி உள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
திருமண வரவேற்பு விழாவிற்குள் கரடி புகுந்து இனிப்புகளை சாப்பிட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.